Saturday, November 23, 2019

"ஒளி" - எழுதியவர் : சுசித்ரா

https://solvanam.com/2019/11/10/%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf/

"சொல்வனம்" இணையதளத்தின் பதிவு சுசித்ரா அவர்கள் எழுதிய "ஒளி"  என்ற சிறுகதை ! 

கவிதையாக நிறைந்தன அத்தனை வரிகளும்! ஒவ்வொரு காட்சியும் கண்முன்னே விரிந்து மயிலாகப் பறந்து நடனமாடின! மதுரையும், கோவிலும், சொக்கனும், சொக்கியும், பச்சை நிறமும், பசுமைப் புல்வெளியும், நீலவானமும், நெடிதுயர் குன்றமும், ஒவ்வொன்றையும் கண்ணாரக் கண்டு நடித்தேன். அசாதாரணமான, அதே சமயம் தெளிவான நடை. தேர்ந்த எழுத்து. தொட்டும் தொடாமலும் காட்டப்படும் பொங்கிவரும் உணர்வுகள் ! தொய்வற்ற ஓட்டம் ! எங்குமே அலுப்புத் தட்டாத எழுத்தும் நடையும் !  வசீகரிக்கும் வார்த்தை ஜாலங்கள் ! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! மகிழ்ந்து போனேன் !என்னை நான் மறந்து போனேன் !  தொடர்க! வளர்க!

Tuesday, November 19, 2019

படிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல் :

படிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல் :
1:
ஆரோக்கிய நிகேதனம்

2 :
திரோபியர் தானேஸ்
தமிழ் மொழிபெயர்ப்பு: சா.துரை
//kanali.in/tharoier-dhanes/

3. https://padhaakai.com/2017/12/10/sirakathirvu/

Saturday, May 4, 2019

சரசுராம் அவர்களின் "சாஸ்வதா",

முதல் பதிவாக சரசுராம் அவர்களின் 'சாஸ்வதா'  என்ற சிறுகதையைப் பதிவு செய்கிறேன் !   தினமணி ஆண்டு மலர் , (30 வயதோருக்கான) சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை இது.  மிகவும் யதார்த்தமான கருத்தும் எழுத்து நடையும். இரண்டு வீட்டுப் பெற்றோரும் சம்மதித்து திருமணம் நடத்தி வைத்தால் அது ஒரு விதம்! அடிப்பதெல்லாம் ஓவர் ஆக்ஷன். ஆனால் அதுதான் சாதாரணமாக நடக்கிற கதை, நிறைய குடும்பங்களில். முடிவு மிகத் தெளிவு! பெற்றோர் குழந்தைகளுக்காகப் படுகிற, பட்ட கஷ்டங்களை நினைத்துப் பார்த்தால் மனம் காதல் திருமணத்தில் அடமாக நிற்காது! பிள்ளைகள் மனம் அப்படி நினைத்து விட்டால் எந்தப் பெற்றோருக்கும் பிள்ளைகளின் விருப்பத்துக்கு மாறாக நடக்க மனம் வராது! இதுதான் உண்மை !
எழுத்தும் கருத்தும் பிரச்சினைக்கான தீர்வும், இடையில் பாட்டி சொல்லும் உண்மைக்கதையும் திருப்பங்களும், தீர்வுக்கான வித்தும் !  மிக மிக அருமை ! 


சிறுகதை : சாஸ்வதா
- சரசுராம்.

**************************************************************************

தம்பிதான் லெட்டரை என் புத்தக ஷெல்பிலிருந்து எடுத்தது. லவ் லெட்டர். கெளதம் எனக்கு அன்புடன் எழுதின கடிதம். உயிரே... அன்பே... ஐ லவ் யூ... போதுமே! அவன் வயதுக்கு அத்தனையும் கெட்ட வார்த்தைகள். யோசிக்காமல் ஒழுக்கம் காப்பாற்ற ஓடிப்போய் அப்படியே அப்பாவிடம் நீட்டினான். அப்பா படித்த பேப்பரை விட்டெறிந்தார். கடிதம் படித்தார். அதன் தலைப்புச் செய்தி சொன்னார். அம்மா அரிசி புடைப்பதை நிறுத்திப் பார்த்தாள். அக்கா ஸ்வெட்டர் பின்னியதை எடுத்து வைத்தாள். வீடே கூடியது. பாட்டி வாய் விட்டு அழுதது. அப்பா எழுந்து வேகமாய் வந்தார். என் ஷெல்பிலிருந்து மற்ற புத்தகங்களை இழுத்து வீசினார். நான் பாத்திரம் கழுவின சோப்புக் கையோடு அதிர்ந்து நின்றேன். மற்ற கடிதங்கள் கைப்பற்றப் பட்டன.
வேகமாய் என்னிடம் வந்தார். முகம் சிவந்த அப்பாவை முதல் முறையாய்ப் பார்க்கிறேன். கேள்வி கேட்காமல் ஒரு அறை விட்டார். அப்பாவிடமிருந்து கிடைத்த பலமான முதல் அடி. அதிர்ச்சிகளின் கலவையில் நான் ஒரு மூலையில் போய் விழுந்தேன். வேகம் குறையாமல் மீண்டும் உதைக்க வந்தார். அம்மா வேகமாய்க் குறுக்கே வர... அம்மாவுக்கு அந்த உதை விழுந்தது. ''பொண்ணை வளர்த்திருக்கிற லட்சணத்தைப் பார்...' என்று அம்மாவுக்கு விழுந்த உதை. பிரச்சினையின் திருப்பத்தில் இருவருக்கும் அடி விழ தம்பி திடுமென அழுதான். பாட்டி உதவிக்குக் கடவுளைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தாள். அப்பா ஆத்திரமாய் அம்மாவை அடிக்கப் போக, அக்கா வந்து தடுத்தாள். அக்காவுக்கு நிறைமாத நேரம். வயிற்றைத் தூக்கிக் கொண்டு குறுக்கே நின்றாள். இன்னும் இரண்டு நாளில் கையில் குழந்தையோடு நிற்கப் போகிறவள். அப்பாவுக்கு கை தளர்ந்தது. கோபம் சட்டென இருபது டிகிரி வெப்பம் குறைந்தது. அம்மா அழுகையோடு உட்கார்ந்திருந்தாள். எனக்கு ஒரு அழுத்தமான அதிர்ச்சி மட்டுமே இருந்தது. அழுகை இல்லை. அப்பா துண்டை உதறி முகம் துடைத்துக் கொண்டார். வியர்த்த பனியனைக் கழற்றி எறிந்தார். மீண்டும் என்னருகில் வந்தார். பாட்டியும் தம்பியும் அழுகையை நிறுத்திப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
''யாரவன்... கெளதம்?'' என்றார்.
எனக்கு பதில் சொல்ல வரவில்லை. கொஞ்சமும் அதிர்ச்சி குறையாமல் எப்படி அடையாளம் சொல்வது?
''சொல்லு...'' என்றார்.
''அப்பா.. அப்றம் கேட்டுக்கலாம். வாங்கப்பா..'' அக்கா இழுத்தாள்.
''விடு... அவ சொல்லுவா.. சொல்லுடி...''
இறுதிக் கட்டம். மறைப்பதற்கு என்ன இருக்கிறது. மறைத்தும் என்ன பலன். எது நடந்தாலும் இன்றே முடியட்டும்.
''கெளதம்... நம்ம சுசீலா மாமி பையன் கெளதம்''
அந்த ஒற்றைத் தகவலில் அப்பா வேகமாய்ப் போனார். வேட்டியை இறுக்கிக் கொண்டார். சட்டையை மாட்டினார். வேகமாய் வெளியே நகர - எழுந்து போய் அம்மா தடுத்தாள்.
''ஆத்திரத்தில் போய் வார்த்தைகளைக் கொட்டிட வேண்டாம். தப்பாயிடும். முதல்ல நம்ம கிட்ட இருக்கிற தப்ப யோசிப்போம்...''
''ஆமாப்பா... கொஞ்சம் அமைதியா இருங்க. எதுனாலும் அப்றம் பேசிக்கலாம்'' என்றாள் அக்கா.
அப்பாவுக்கு எதையும் வீட்டோடு கலந்தே முடிவெடுத்த பழக்கம். அம்மாவின் கருத்து, பாட்டியின் அபிப்பிராயம் இணைந்ததே அப்பாவின் செயலாய் இருக்கும். இப்போது அக்காவும் அம்மாவும் நிறுத்த அப்பா நின்று யோசித்தார். அப்பாவின் சட்டை மீண்டும் ஆணிக்குப் போனது. வீடே அமைதியாய் இருந்தது. பிறகு யாரும் என்னிடம் பேசவில்லை. அப்பா சேரில் போய் சாய்ந்து கொண்டார். அம்மா புடைத்த அரிசியோடு சமையலறைக்குள் போனாள். அக்கா ஸ்வெட்டரை மேலும் தொடர்ந்தாள். தம்பி சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே போனான். பாட்டி மட்டும் என்னருகில் வந்தாள். நான் அப்பா அடித்துப் போட்ட இடத்தில்தான் இருந்தேன்.
''சாஸ்வதா'' என்றாள் பாட்டி.
சாஸ்வதா... அழிவில்லாதவள். நிலையானவள். நிரந்தரி. என் பெயரின் அர்த்தம் இனி இந்த வீட்டில் சிரிப்பைத் தரலாம். சேகரித்த நூறு பெயரில் அப்பாவுக்குப் பிடித்த பெயர். அப்பாவின் ரசனை வெளிப்பாடு. எதிலும் வித்தியாசம் தேடுகிற குணம். காதலைப் புரிந்து கொள்ளாமல் என்ன வெட்டியாய் வித்தியாச குணம். அப்பாவை முதல் முறையில் என் பார்வையில் விமர்சிக்கிறேன். பாட்டி என்னைக் கூப்பிட்டதற்கு நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை நான்.
''சாஸ்வதா...'' மீண்டும் பாட்டி கூப்பிட்டாள்.
''ஏய், கிழவி... பேசாம இங்க வர மாட்டே?'' அப்பா கிழவியக் கூப்பிடுங்கப்பா!'' அக்கா கத்தினாள்.
''நீ பேசாம உன் வேலையைக் கவனிடி...'' பாட்டி திருப்பிக் கத்தினாள்.
அப்பா எதுவும் பேசாமல் யோசனையோடு உட்கார்ந்திருந்தார். அம்மா சமையலறையிலிருந்து முகத்தை ஒற்றிக் கொண்டு பார்த்தாள்.
''நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் தேவையாடி. இதையெல்லாம் விட்டுட்டு படிக்கிற வழியைப் பாருடி. இன்னும் ஒரு வருஷம் பாக்கியிருக்கு. அப்றம் வேண்டியதைச் செய்து உங்கக்கா மாதிரியே உனக்கு நல்ல இடத்தில கட்டி கொடுக்காமலா போயிருவோம்?''   
பிறகு நான் அக்காவோடு ஒப்பிடப்பட்டேன். தராசுத் தட்டில் நான் மிக மிக எடை தாழ்ந்திருந்தேன். அக்கா ஒழுங்காகப் படித்தாள். வகுப்பில் முதல் மாணவி. தொடர்ந்து கல்லூரிப் படிப்பு. ஆண்களும் படித்த கல்லூரிதான். என்றாலும் எவனும் பாதித்ததாய் இவளிடம் கதை இல்லை. பிறகு படிப்பு முடிந்ததும் வீட்டில் பார்த்த மாப்பிள்ளைக்குக் கல்யாணம். இப்போது ஒரு குழந்தைக்குத் தாயாகிற அடுத்த ஸ்தானம். அக்கா குடும்பம் வரைந்த நேர்கோட்டில் நகர்ந்த பெண். நான் எனக்குப் பிடித்த நேர்கோட்டை நானே வரைந்திருக்கிறேன். யாருக்குப் பிடிக்கும்? என் மனசெல்லாம் கெளதமை உடனே பார்க்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டது.
நான் உட்கார்ந்த இடத்திலிருந்து வாசல் வழியாக வீதியின் பைப்படி தெரிந்தது. குடிநீருக்கு மொத்த காலனியின் ஒவ்வொரு முக்கிலும் ஒரு பைப் உண்டு. பைப்பைச் சுற்றிலும் மே ·ப்ளவர் உதிர்ந்து கொண்டிருக்கும். கெளதம் பேசியபடி தயங்கித் தயங்கி என்னிடம் முதல் ஐ லவ் யூ சொன்னது இந்த இடத்தில்தான். அந்த மழை நேரத்தில் ஒரு மின்னல் எனக்குள் பளீரென பாய்ந்து பரவியது. வெறும் குடத்தோடு நான் வீடு திரும்பினேன். உடம்பு நடுங்கியது. என்னாச்சு என்றாள் அம்மா. ஒரு மாதிரி இருக்கும்மா என்றேன். அடுத்தநாள் நான் காய்ச்சலில் படுத்ததற்கு மழைதான் காரணம் என்றார்கள். அடுத்த முறை பைப்படிக்கு நான் போகவில்லை. அம்மாதான் போனாள். கெளதம் "நீங்க ஏன் மாமி கஷ்டப்படறீங்க சாஸ்வதா இல்லையா?" என்றானாம். அம்மா எனக்கு உடம்பு சரியில்லாததைச் சொல்லியிருக்கிறாள். அப்புறம் கெளதம் தண்ணீர் எடுப்பதை ஒரு குடத்தோடு முடித்துக்கொண்டான்.
கெளதமைக் காலனியில பொதுவாய் எல்லோருக்கும் பிடிக்கும். காலனியின் பொதுக்காரியங்களில் தயங்காமல் எந்த வேலையையும் செய்கிற குணம். ஒரு முறை ரோட்டோர பார்த்தீனிச் செடிகளைப் பிடுங்கி கையில் அரிப்பு வந்து டாக்டரிடம் போனான். சுதந்திர தினமென்றால் நண்பர்களைக் கூட்டிக்கொள்வான். வீதி முக்கில் குழி தோண்டுவான். தயாரிக்கப்பட்ட கொடிக் கம்பத்தை நட்டு, "ஜன கன மன" பாடி எல்லோருக்கும் மிட்டாய் நீட்டுவான். படித்த படிப்பிற்கு இன்னும் தகுந்த வேலை இல்லை. தற்காலிகமாய் டுடோரியல் காலேஜில் வாத்தியார் உத்தியோகம். அப்பொழுது கெளதமிடம் சாதாரணமாய் இரண்டொருமுறை பேசியிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் அவன் என்னை மனதிற்குள் வைத்தே பேசுகிறான் என்று எனக்குப் புரியவில்லை.
அப்புறம் நான் உடம்பு சரியாகி காலேஜூக்குப் போன பஸ்ஸில் தான் கெளதமும் வந்தான். நலம் விசாரித்தான். ஏதாவது தவறாக கேட்டிருந்தால் மன்னிக்கச் சொன்னான். மறந்து விடவும் சொன்னான். இனிமேல் மறக்க முடியாது என்று நிமிர்ந்து பதில் சொன்னேன். அவன் முகத்தில் சந்தோசம் சிவப்பாகி மத்தாப்பாய் சிரித்தது. அப்றமென்ன காதல், காதல், காதல்தான். காலனியின் இளைஞர் சங்கத்தில் நானும் சேர்ந்தேன். சேர்ந்த இரண்டு வாரத்தில் நான் பொருளாளர் ஆனேன். கெளதம் தான் செயலாளர். இருவரும் இணைந்து நடத்திய குடியரசு தின விழா சிறப்பாய் இருந்ததாகக் காலனியில் நெடுநாள் பேச்சு இருந்தது. ஆண், பெண் பேச்சுக்கள் சகஜமான சூழ்நிலையில் எங்கள் நெருக்கம் காதலெனப் பரவவில்லை.
கெளதம் வீட்டில் சாதரணமாய்ப் போய் பேசிவிட்டு வருவேன். கெளதமின் அம்மா கட்டும் மடிசார் எனக்குப்  பிடிக்கும். ஒருமுறை நான் விரும்பிக் கேட்க எனக்கும் மாமி மடிசார் கட்டிவிட்டார்கள். நான் அப்படியே காலனியில் ஒரு வலம் வந்து கலக்கினேன். எல்லோரும் என்னை 'அசல் ஐயர் ஆத்து மாமி மாதிரியே இருக்கே' என்றார்கள். என் வேண்டுதலும் அது தானே? கெளதம் அப்பாவுக்கு எல்லோரும் வீடு தேடி வந்து போவதே சந்தோசம். அவருக்கு சந்தனப் பொட்டில் எப்போதும் சிரித்த முகம்.
அப்றம் புவனா வீட்டில் தான் அடிக்கடி பேசிக் கொண்டிருப்போம். புவனாம்மா தெரியாமலே எங்கள் காதலுக்கு மிக்ஸரும் டீயும் தந்து உதவியிருக்கிறார்கள். புவனாவுக்கு விஷயம் தெரியும். உங்க வசதி எந்த காதலர்களுக்கும் கிடைக்காதெனப் பொறாமைப்படுவாள். அப்றம் ராஜாராம் வீட்டு மொட்டைமாடி. நண்பர்கள் கூடிப் பேசுகிற இடம். அத்தனை கூட்டத்திலும் நாங்கள் மட்டும் தனித்துப் பேசுவோம். இளைஞர் மன்ற அறையில் மீட்டிங் என்ற சாக்கில் எங்கள் மீட்டிங் நடக்கும். எப்பொழுதாவதுதான் கெளதம் காலேஜில் வந்து பேசுவான். நேரடியான தொடர்பு இல்லாத சமயங்களில் மட்டும் கடித வழியில் காதல் வளர்த்தோம். இரண்டு முறை பயந்து பயந்து கூட்டமில்லாத தியேட்டரில் சினிமா பார்த்தோம். தேவையில்லாத பிரச்சினைகளைக் கிளப்பும் என்று சினிமாவெல்லாம் தவிர்த்தோம். யாரும் வராத சின்னக் கோயில்களில் இணைந்து எங்கள் வேண்டுதல் நடக்கும். வெய்யிலோ, பலத்த மழையோ பார்த்திராத காதல் செடி. கடிதம் காட்டிக் கொடுக்க சட்டென வாடி நிற்கிறது. எதிர்ப்பு இல்லாமல் என்ன காதல்? அதையும் பார்ப்போம். கெளதம் வீட்டுக்கு சாயந்திரம் பிரச்சினை போகும். அங்கே எப்படி வெடிக்கப் போகிறதோ? கெளதமை உடனடியாய்ப் பார்க்க வேண்டும், பேச வேண்டும்.
மதியம் புவனா என்னைத் தேடி வந்தாள். வீடு நடந்த பிரச்சினைகளைக் காட்டிக் கொள்ளாமல் சாதரணமாய் இருந்தது. டி.வி.யில் மதியப் படம் யாரும் பார்க்கவில்லை. நான் எழுந்து முகம் கழுவி உட்கார்ந்திருந்தேன். அம்மா வந்து ஒருமுறை கூப்பிட்டாள். அப்பா பாட்டியிடம் என்னை சாப்பிட தூது அனுப்பினார். இதுவரை எந்தக் கோபத்தையும் நான் சாப்பாட்டில் காட்டியதில்லை. இந்த முறை சுத்தமாய் சாப்பிட மனசில்லை. அக்கா என்னை எதுவும் கேட்கவில்லை. புவனா வந்ததுமே வீட்டில் ஏதோ பிரச்சினை என்று புரிந்து கொண்டாள். வீட்டின் பின்புற துவைக்கிற கல்லில் உட்கார்ந்து கொண்டோம். கல் முழுவதும் கொய்யாமர நிழல் இருந்தது.
''கெளதமை உடனடியா பார்க்கணும் புவனா?''
''என்ன அவசரம், என்ன நடந்தது சொல்லு''
நடந்ததைச் சொன்னேன். புவனாவிடம் சொன்னபோது தான் எனக்கு அழுகை வந்தது. என் தம்பியை ரோட்டில் நிறுத்தி அறைய வேண்டும் என்றாள். பிறகு என்னை சமாதானப்படுத்தினாள். சாயந்திரத்திற்குள் கெளதமைப் பார்த்து விடலாம் என்றாள். புவனா அதைச் செய்துவிடுவாள். புவனாவுக்கு காதல் புரியும். புவனா ராஜாராமிடம் காதல் வேண்டி போனவாரந்தான் கடிதம் கொடுத்திருக்கிறாள். அப்றம் பின்புற வழியாகவே புவனா போய்விட்டாள்.
கெளதம் வீட்டுக்கு அப்பா போகவில்லை. மதியம் முன்று மணிக்கு அம்மாதான் போனாள். இன்று ஞாயிற்றுக்கிழமை. கெளதம் வீட்டில் எல்லோரும் இருப்பார்கள். அம்மா பேசிவிட்டு முகம் வாடி வந்தாள். நடந்ததைச் சொன்னாள். வீட்டில் கெளதம் இல்லையாம். கெளதம் அப்பா எதுவும் பேசவில்லையாம். எல்லாம் அந்த மாமிதான் பேசினார்களாம். தப்பு எல்லாம் உங்க பொண்ணு மேலதான் என்று கத்தியிருக்கிறது மாமி. அம்மா மெதுவாகப் பேசச் சொல்லியும் கத்தியிருக்கிறது. பக்கத்து வீடுகள் வாசலுக்கு வந்து பார்த்தார்களாம். உங்க பொண்ணை ரோட்டுக்கு விடாதே என்பதே அவர்களின் வாதமாய் இருந்ததாம். அப்பா எல்லாம் கேட்டுவிட்டு மீண்டும் என்னை அடிக்க வந்தார். கெளதமின் அப்பாவிடம் அப்றம் நான் போய் பேசிக்கொள்கிறேன் என்று திரும்பிப் போய்விட்டார். இந்நேரம் காலனி முழுவதும் எங்கள் பிரச்சினை பரவியிருக்கும். இப்படித்தான் நடக்கும்னு எங்களுக்கு முதல்லே தெரியும் என்று இனி எல்லோர் வார்த்தைகளும் திரும்பும்.
சாயந்திரந்தான் அக்காவுடன் வாக்கிங் போக வெளியே வந்தேன். அக்கா வந்ததிலிருந்து துணைக்கு நான்தான் நடக்கிறேன். காலனியில் மக்கள் சாதாரணமாய்ப் பார்ப்பதே உறுத்தலாய் இருந்தது. சில பார்வைகள் விஷயம் பரவியிருப்பது உண்மை என்றது. அக்கா ஏதேதோ பேசிக் கொண்டு வந்தாள். என் பிரச்சினை குறித்து அவள் எதுவுமே கேட்கவில்லை. அவள் மெளனம் எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.
''என் குழந்தைய ஆட்டோவிலெல்லாம் ஸ்கூலுக்கு அனுப்பமாட்டேன் சாஸ்வதா. நானே கூட்டிட்டுபோய் நானே கூட்டிட்டு வந்துருவேன். ஒரே ஆட்டோவில பத்து குழந்தைகளை புளிமுட்டை மாதிரி அடைச்சுட்டுப் போய் திரும்பி வர்ற வரைக்கும் நமக்கு வயத்தில புளியக் கரைக்கும். எதுக்கு ரிஸ்க்?''
''இப்பவே திட்டமிட்டு குடும்ப நடத்த ஆரம்பிச்சிட்டியே''
''கைவசம் நிறைய திட்டம் வெச்சிருக்கேன் சாஸ்வதா. அப்பா நம்மளக் கூட அப்படித்தானே வளர்த்தினாரு. உன்னையும் என்னையும் ஸ்கூலுக்கு அப்பா சைக்கிள்ள கூட்டிட்டுப் போவாறே ஞாபகமிருக்கா?'' என்றாள்.
''இருக்கு'' என்றேன்.
காலனியை விட்டு வெளியே வந்து மெயின் ரோட்டில் நடந்து கொண்டிருந்தோம். வாகனங்கள் கவலையில்லாமல் போய்க்கொண்டிருந்தன. அதிகபட்சம் ஒரு கிலோமீட்டராவது நடப்போம். ஐயப்பன் கோவிலுக்குப் பக்கத்தில் வந்தபோது கெளதம் சைக்கிளில் வந்து நின்றான். என்னுடன் பேசவேண்டும் என்றான். நான் அக்காவைப் பார்த்தேன். அக்கா எதுவும் சொல்லவில்லை. அக்கா ரோட்டை விட்டு ஒதுங்கி நின்றாள். நானும் கெளதமும் தனியே போனோம்.
''என்னாச்சு கெளதம். முகம் வீங்கியிருக்கு?''
''அப்பா அடிச்சுட்டார். உங்கம்மா வந்து திட்டிட்டுப் போனாங்களாம். ஒழுங்கா ஒரு நல்ல வேலை தேடறத விட்டுட்டு இந்த வேலை இப்ப எதுக்குன்னு கை வெச்சுட்டாரு''
''உனக்கும் அடியா?''
''அவங்களுக்கு இதெல்லாம் அடிக்கிற தப்புதானே?''
"என்ன செய்யறது கெளதம்?"
"காலனி முழுவதும் நம்மளப் பத்திதான் பேசுது. இனி இருக்கிற ஒவ்வொரு நாளும் நமக்குப் பிரச்சினைதான் சாஸ்வதா..."
"எனக்கும் இனி வீட்டில நிம்மதி இருக்காது கெளதம். ஒவ்வொரு விஷயத்திரும் சந்தேகப்பட்டு சாகடிச்சுடுவாங்க"
"என்ன பண்ணலாம் சாஸ்வதா?"
"நீயே சொல்லு"
"புவனா வந்து பேசினா. அப்றம் ராஜாராம். சுரேஷ் எல்லாத்துக்கிட்டேயும் இப்பத்தான் பேசிட்டு வர்ரேன்.."
               
"எல்லாம் என்ன சொன்னாங்க?"
"நேரா மருதமலைக்குப் போய் கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்னுடுன்னாங்க"
"ஓடிப்போறதா?"
"இப்படியே போராடலாங்கறியா?"
அப்புறம் நான் எதுவுமே பேசவில்லை. உடனே எதுவும் பதில் சொல்லவில்லை. கெளதம் நாளைக்குப் பதில் சொல் என்றான். அக்கா வெகு நேரம் வயிற்றில் சுமையுடன் நிற்கிறாள். அப்றம் நான் பேச்சை முடித்துக்கொண்டேன். மீண்டும் நானும் அக்காவும் நடந்தோம். அக்கா கெளதமிடம் பேசியதுபற்றி எதுவுமே கேட்பவில்லை. அதுவே எனக்கு உறுத்தலாய் இருந்தது. எதுபற்றியும் கேட்காத மெளனமும் எனக்குக் கோபத்தைத் தந்தது. பொறுக்க மாட்டாமல் அதை அக்காவிடமே கேட்டேன்.
''நான் யாரையும் காதலிக்கல. ஆனா... காதல் புரியாதுன்னோ, பிடிக்காதுன்னோ எப்பவாவது சொல்லியிருக்கேனா?'' என்றாள்.
நான் அக்காவை ஆச்சரியமாய்ப் பார்த்தேன்.
ராத்திரி தூக்கம் வரவில்லை. அக்கா முகத்தில் படித்த புத்தகத்தோடு தூங்கிக் கொண்டிருந்தாள். நான் ஜன்னல் வழியாக நட்சத்திரங்களைப் பார்த்தேன். பிறகு யோசனையில் காலனியிலிருந்து இதற்கு முன் ஓடிப் போனவர்கள் வந்தார்கள். எனக்குத் தெரிந்து மோகன் - விஜயலட்சுமி ஜோடி தான் முதலில் ஓடிப் போனது. கல்யாணம் பண்ணிக் கொண்டு வீட்டிற்கு வந்தும் யாரும் சேர்த்துக் கொள்ளவில்லை. அப்படியே திரும்பிப் போனார்கள். கோயமுத்தூரில் இருவரும் ஒரு குழந்தையோடு சந்தோஷமாய் குடும்பம் நடத்துவதாய் சுரேஷ் சொன்னான். அப்றம் ஓடிப் போனது ரேகா - மகேந்திரன் ஜோடி. கல்யாணம் பண்ணிக் கொண்டு வந்த அவர்களுக்கும் அதே கதிதான். காலனியிலேயே தனியே வீடு பார்த்து குடியிருந்தார்கள். பிறகு ஒரு குழந்தை பிறக்க குடும்பங்கள் ஒன்று சேர்ந்தன. இது தவிர ஜோடி சேராமல் பிரிந்த ஜோடிகளின் கதைகள் வேறு. அடுத்த லிஸ்டில் நாங்கள் வரப் போகிறோமா?. அப்படியே போனால் வீட்டில் சேர்த்துக் கொள்வார்களா? நெடுநேரம் விழித்தும் விடை தெரியாமல் தூங்கிப் போனேன்.
விடிந்த போது சரியாகத் தூங்காமல் தலை வலித்தது. அப்பா ஆபீஸ் கிளம்பிப் போனார். தம்பி ஸ்கூலுக்குப் போனான். காலேஜ் போக புவனா வந்தாள். நான் வரவில்லை என்றேன். என்ன முடிவு பண்ணியிருக்கே என்றாள். இன்னும் முடிவு பண்ணவில்லை என்றேன். சீக்கிரம் சொல்லு, லேட்டானா பிரச்சினை பெரிசாயிடும் என்றாள். ராஜாராம் இதுமாதிரி கூப்பிட்டா காலேஜிலிருந்து அப்படியே ஓடிப் போயிடுவேன் என்றாள். நான் மறுபடியும் யோசனையைத் தொடர்ந்தேன். சாயந்திரத்திற்குள் கெளதமிடம் முடிவு சொல்லியாக வேண்டும்.
பத்து மணிக்கு அக்கா இலேசாய் இடுப்பு வலிக்கிறது என்றாள். அம்மா அப்பாவுக்குப் போன் பண்ணச் சொன்னாள். நான் லோகநாத மாமா வீட்டிற்கு ஓடினேன். போன் பண்ணிவிட்டு வரும்போது அம்மா ஆட்டோ பிடிக்க ரோட்டிற்கு வந்தாள். வலி அதிகமாயிடுச்சு என்றாள். அம்மாவும் பாட்டியும் அக்காவை ஆஸ்பிட்டலுக்கு கூட்டிப் போனார்கள். நான் பஸ்ஸில் போனேன்.
அப்பா ஆபிஸிலிருந்து வந்தார். மாமாவை வரச் சொல்லி கோயமுத்தூருக்குப் போன் பண்ணினாராம். அக்காவை டாக்டரம்மா செக்கப் செய்தார்கள். இன்னும் நேரம் இருக்கு என்றார்கள். அக்காவுக்கு தனியறை ஒதுக்கப்பட்டது. அப்பா எதுவானாலும் போன் பண்ணச் சொல்லிவிட்டு மீண்டும் ஆபிஸ் போனார். அம்மா மதியம் சாப்பாடு கொண்டுவர வீட்டிற்குப் போனாள். அக்காவுடன் நானும் பாட்டியும் இருந்தோம். அக்கா அமைதியாய்ப் படுத்திருந்தாள். பாட்டி என்னிடம் எதுவும் பேசவில்லை. மாமா வந்ததுமே என் பிரச்சினை அவரிடமும் அலசப்படும். மாமா வந்ததுமே போட்டுக் கொடுக்க வேண்டாம் என்று பாட்டியிடம் எச்சரித்தேன். பிறகு ஜன்னல் அருகே நின்று யோசித்தேன். மழை வருகிற மாதிரி காற்று குளிர்ந்து வீசியது. யோசனைகள் கலைந்து கலைந்து ஒரு தெளிவான உருவத்திற்கு வந்தது.
பனிரெண்டு மணிக்கு மாமா வந்தார். வந்ததுமே மச்சினியாரே என்று என் தலையில் கொட்டினார். வரும் வழியில் ஈச்சனாரி கோயிலுக்குப் போனதில் கொஞ்சம் தாமதமாம். அக்காவுக்கு திருநீர் நீட்டினார். அவரே குங்குமம் வைத்தார்.
''என்ன மாமா பையன் பொறக்கணும்னு வேண்டுதலா?'' என்றேன்.
''பையனோ, பொண்ணோ எந்தக் குறையும் இல்லாமப் பொறக்கணும் அவ்வளவுதான்'' என்றார்.
கொஞ்ச நேரத்தில் அக்காவுக்கு வலி ஆரம்பித்தது. எழுந்து வயிற்றைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள். இலேசாய் முனங்க ஆரம்பித்தாள். கட்டிலின் கம்பியை வளைக்கிற மாதிரி இறுக்கப் பிடித்தக் கொண்டு நின்றாள். அம்மா.. அம்மா.. என்றாள். பிறகு நடக்க ஆரம்பிக்க மீண்டும் வலியால் கத்தினாள். மாமா ஓடிப் போய் டாக்டரைக் கூட்டி வந்தார். டாக்டரம்மா வயிற்றைத் தொட்டுப் பார்த்து விட்டு அப்படித் தான் இருக்கும், இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கச் சொன்னார். அறையின் சுவரில் அம்மன் படம் இருந்தது. அக்கா அதனருகில் போய் நின்றுகொண்டாள். இலேசாக கண்கலங்கி 'கடவுளே, கடவுளே' என்றாள். நான் பக்கத்தில் அவள் தோளைப் பிடித்துக் கொண்டேன். கொஞ்சம் அமைதியானாள். நான் அப்பாவுக்குப் போன் செய்தேன். அப்படியே லோகநாத மாமாவுக்குப் போன் செய்து அம்மாவை சீக்கிரம் வரச் சொன்னேன். நான் அறைக்குள் வர அக்கா மீண்டும் அலறினாள். பாட்டி 'முருகா முருகா' என்று சொல்லச் சொன்னாள். அக்கா 'முருகா முருகா' என்றாள். கட்டிலில் கையூன்றி அப்படியே நின்றாள். கண்ணீர் மளமளவெனக் கொட்டியது. பாட்டி கண் கலங்கினாள். மாமா வெளியே போய் நின்று கொண்டார்.
''இவ்வளவு சிரமமா பாட்டி'' என்றேன்.
''ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பிறவியடி'' என்றாள்.
மேலும் அம்மா வலி தாங்காமல் கத்த மாமா டாக்டரைக் கூட்டி வந்தார். செக்கப் செய்த டாக்டர் நர்சுகளைக் கூப்பிட்டார். நர்சுகள் வந்தார்கள். ஸ்டிரெச்சர் வந்தது. அக்காவைப் பிரசவ அறைக்குள் அழைத்துச் சென்றார்கள்.
நாங்கள் வராந்தாவில் நின்றிருந்தோம். வானம் இருட்டிக் கொண்டு வந்தது. இலேசான மழைத் தூறல் துவங்கியது. மாமா தவிப்பது புரிந்தது. பாட்டி வேண்டிக் கொள்வது தெரிந்தது.
''சுகப் பிரசவம்னா... நம்ம குலதெய்வக் கோயிலுக்கு நம்ம ஊரிலிருந்து நடந்து வந்தே பொங்கல் வைக்கிறதா வேண்டியிருக்கேன்'' என்றார் மாமா.
நர்ஸ் வெளியே வந்தாள். நீள வெள்ளைத் துணி கேட்டாள். மாமா அறைக்குப் போய் ஒரு வேட்டியைக் கொண்டு வந்து தந்தார். மீண்டும் கதவு சாத்தப்பட்டது. மழை பலமாய்ப் பிடித்துக் கொண்டது. அப்பா மழையில் மாட்டிக் கொண்டிருக்க வேண்டும். நான் மாமாவைப் பார்த்தேன். கண் கலங்கி இருந்தார். பாட்டி என்னருகில் வந்தாள்.
''சாஸ்வதா... உங்கம்மா மொட்டையடிச்சு இருக்கிற நம்ம குடும்பப் போட்டோ ஞாபகமிருக்கா?'' என்றாள்.
எனக்கு ஞாபகமிருக்கிறது. அம்மா மொட்டை போட்டு கொஞ்சம் முடி முளைத்துப் பார்க்கச் சிரிப்பாய் இருக்கும். அம்மா என்னைக் கையில் வைத்துக் கொண்டு நின்றிருப்பாள். அக்கா அப்பாவின் கை பிடித்து வலதுபுறம் நின்றிருப்பாள். இப்போது பார்த்தாலும் அப்பாவும் நீயும் அண்ணண் தம்பி மாதிரி இருக்கீங்க... '' என்று நானும் அக்காவும் போட்டோவில் அம்மாவைக் கிண்டலடிப்போம்.
''ஆமா, அதுக்கென்ன இப்போ?'' என்றேன்.
''உங்கம்மா ஏன் மொட்டை போட்டான்னு தெரியாதில்ல?''
நான் அமைதியாய்ப் பாட்டியைப் பார்த்தேன்.
''உன்னைப் பச்ச மண்ணா நர்ஸ் வந்து நீட்டினதும் எல்லோருக்கும் அப்படியொரு சந்தோஷம். ஆனா டாக்டரம்மா வந்து ஒரு குண்டைப் போட்டா. உனக்கு வலது கை இயக்கமேயில்ல. வேலை செய்யறது கஷ்டம்னா. எல்லோரும் கலங்கிப் போயிட்டோம். உங்கம்மா கேட்டதும் அந்த ஒரு நாள் முழுசும் அழுதா. எதுவும் சாப்பிடாமக் கத்தினா. உங்கப்பா வெளியூரிலிருந்து குழந்தைகள் ஸ்பெஷலிட்ட கூட்டிட்டு வந்தான். உன் கைக்கு என்னென்னவோ செய்தாங்க. மூணு நாள்ல முடிவு தெரியும்னு டாக்டர் போயிட்டார். அப்பத் தான் உங்கம்மா நம் கோயிலுக்கு வேண்டிகிட்டா. கடவுளே என் குழந்தை கை சரியாச்சுன்னா... உனக்கு வந்து நான் மொட்டை போடறேன்னு. அப்றம் மூணு நாள்ல டாக்டருங்க பயிற்சியெல்லாம் தந்து உன் கைய குணமாக்கிட்டாங்க. வீட்டுக்கு வந்ததும் உங்கம்மா சொன்னபடியே சாமிக்கு மொட்டை போட்டுகிட்டு வந்து நின்னா'' பாட்டி சேலையை வாயில் பொத்திக் கொண்டு அழுதாள். எனக்கு குபுக்கென்று கண் கலங்கியது.
அம்மாவை உடனே பார்க்க வேண்டும் போலிருந்தது. அப்பா இன்னும் ஏன் வரவில்லையென வாசலைப் பார்த்தேன். அறைக்குள்ளிருந்து குழந்தையின் முதல் அழுகை கேட்டது. கதவு திறந்தது. நர்ஸ் துணியால் துடைத்து குழந்தையைத் தந்தாள். மாமா வாங்கிக் கொண்டார். பெண் குழந்தை. நல்ல பிரசவம்தான் என்றாள் டாக்டரம்மா. கொச கொசவென முடியோடு சிவப்பு நிறத்தில் அந்த புது மலர் தவழ்ந்தது. மாமாவுக்கு சந்தோஷம் முகத்தில் குதித்தது. பாட்டி குழந்தையை வாங்கிக் கொண்டாள். மாமா என்னை கோயமுத்தூருக்கு ஒரு போன் பண்ணச் சொன்னார்.
நான் வெளியே வந்தேன். மழை பலமாய் தொடர்ந்து கொண்டிருந்தது. ரோட்டிற்கு வந்த போது மழையில் நனைந்தபடி கெளதம் சைக்கிளில் வருவது தெரிந்தது. பக்கத்தில் வந்து சைக்கிளை நிறுத்தி கெளதம் என்னையே பார்த்தான்.
''சாயந்திரம் வரைக்கும் என்னால பொறுத்துக்க முடியாது சாஸ்வதா. முடிவை இப்போதே சொல்லு...'' என்றான்.
நான் அமைதியாய் இருந்தேன். வானில் இடி இடித்தது.                      
''சொல்லு.. சாஸ்வதா..''
''நாம ஓடிப் போக வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன் கெளதம். என்ன திடீர்னு ஞானோதயம்னு அப்றம் சொல்றேன். அம்மா, அப்பான்னு இத்தனை வருஷம் அவங்க பாதுகாப்பில வளர்ந்து அவங்க தந்த வசதியெல்லாம் பயன்படுத்திட்டு, நமக்குன்னு பக்குவம் கிடைச்சதும் எல்லாத்தையும் உதறிட்டு ஓடிப் போறதுங்கறது அபத்தம்னு தோணுது கெளதம். எனக்கு எங்க வீடும் வேணும் - நீயும் வேணும். முதல்ல நீ நல்ல வேலை தேடு. அப்றம் எங்க வீட்ல முறையா வந்து என்னைக் கேளு. சம்மதம் உடனே கிடைக்காது. ஆனா தொடர்ந்து தட்டினா, திறக்காத கதவுன்னு எங்காவது உண்டா?'' என்றேன்.
கெளதம் என்னை ஆச்சரியமாய்ப் பார்த்தான். வானில் ஒரு மின்னல் வெட்டிப் போனது. பிறகு இருவரும் மழையில் நனைந்தபடி போன் செய்யப் போனோம்.

*********


நன்றி : தினமணி ஆண்டு மலர் (30 வயதோருக்கான சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற சிறுகதை)


Friday, May 3, 2019

கதை வீதி - அறிமுகம்

கதைவீதி - அறிமுகம் 


கதை வீதிக்கு வருகை தரும் அனைவருக்கும் எம் இதயம் நிறைந்த வரவேற்பு ! வாழ்த்துக்கள் ! நன்றி !

இந்தக் கதை வீதியை வலையத்தில் தொடங்கியிருக்கும் காரணம், நாமறிந்த அனைத்து  எழுத்தாளர்களின் கதைகளையோ/கவிதைகளையோ,  கதை/கவிதைகளின் பகுதியையோ, சாராம்சத்தையோ  -  எதை வேண்டுமானாலும் நாம் மனமாரப் பகிர்ந்து கொண்டு, அவற்றைப் பற்றி உரையாட, ஒரு சிறந்த மேடையாக இது திகழ வேண்டும் என்பதுதான்.  

இங்கு மொழி ஒரு தடைக்கல் அல்ல.  எந்த மொழியின் கதைகளும்/கவிதைகளும் , விஷயங்களும் வரவேற்கத் தகுந்தவையே ! 

அனைவரும் தயை கூர்ந்து இதில் பங்கேற்று, இதனை வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறோம் !


2012  இலேயே சிந்தையில் விதைக்கப்பட்ட வித்து , இன்றுதான் உருக்கொள்ளுகிறது :-)